3 மாநிலங்களவை காலி இடங்களுக்கு தனித்தனி தேர்தல் நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

புதுடெல்லி: தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலையும், குஜராத்தில் நடத்தியது போன்று தனித்தனியாக உடனடியாக நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு கொடுத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. அதற்கு திமுக, அதிமுக.வை சேர்ந்த தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக.வை சேர்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அதன் கூட்டணி கட்சியான தமாகா.வின் சார்பாக ஜி.கே.வாசனுக்கு பதவி வழங்கப்பட்டது.      இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். இதனால், கடந்த ஏப்ரல் 10ம் தேதி இருவரும் தங்களின் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தனர்.

அந்த இடங்கள் பதவி காலியாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான் கடந்த மார்ச்சில் இறந்தார். இதனால், தமிழகத்தில் தற்போது மொத்தம் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன.     இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்பி வில்சன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திராவை நேற்று மாலை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளனர். பின்னர், அவர்கள் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். குஜராத்தில் நடத்தப்பட்டது போல், தமிழகத்திலும் காலியாக இருக்கும் 3 இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தி உள்ளோம். அதை பரிசீலித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்,’’ என்றனர்.

Related Stories: