சென்ட்ரல், மதுரை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த மே 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பெங்களூரு ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் மற்றும் மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ரயில்நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசார் ரயில் நிலையங்களில் சோதனை நடத்தினர். சோதனையில்குண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் நம்பரை வைத்து போலீசார் விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.

Related Stories: