மாநகராட்சி அதிகாரிகள் தகவல்: சென்னையில் கொரோனா பாதிப்பு: ஒரு சதவீதமாக குறைந்தது

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரு சதவீதமாக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று காலை நிலவரப்படி, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 7464 ஆக குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 1 சதவீதமாகும். அதேபோல, அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை  800க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, அண்ணாநகரில் மட்டும் 805 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 53 ஆயிரம் பேரும், கோடம்பாக்கத்தில் 50 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் கொரோனாவுக்கு 920 பேர் பலியாகியுள்ளனர்.   

சென்னையில்,  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நாளொன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில்  நேற்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது.  அதேநேரம், 5 லட்சத்து 11 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7,646 போ் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,876 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்  மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு  500க்கும் குறைவானவர்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், உருமாறிய கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கியது.

 இந்த எண்ணிக்கை மே மாதத்தில் உச்சத்தை எட்டி, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு  6 ஆயிரத்தை கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.

Related Stories:

>