‘திருமணம் வேண்டாம்...தடுத்து நிறுத்துங்க சார்...’எஸ்பிக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை: மதுரையில் பரிதாபம்

மதுரை: கட்டாயத் திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி மதுரை எஸ்பிக்கு  மெசேஜ் அனுப்பிய பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மதுரை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், பிளஸ் 2 படித்து வந்தார். இவரை தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்தை விரும்பாத மாணவி, படிக்கவேண்டும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தும், சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட மாணவி, தன் தோழி ஒருவரின் ஆலோசனைப்படி, மதுரை எஸ்பி அலுவலக போன் எண்ணை வாங்கி, ‘‘நான் படிக்கணும். எனக்கு திருமணம் வேண்டாம். எப்படியாவது தடுத்து நிறுத்துங்க சார்’’ என்று செல்போனில் எஸ்பிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து மதுரை அண்ணா நகர் போலீசார், மாணவியின் வீட்டிற்கு சென்று, இருதரப்பு பெற்றோரையும் சந்தித்தனர். படிப்பு முடிந்து உரிய வயது வரை, திருமணம் செய்யக் கூடாது என அவர்களை எச்சரித்து, எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். ஆனாலும் மாணவியின் குடும்பத்தினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: