அனைத்து உயர் பதவியிலும் மகளிர் நியமனம் பெண்கள் கோட்டையாக மாறிய புதுக்கோட்டை

புதுக்கோட்டை: பெண்ணினத்துக்கு பெருமை சேர்த்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மண்ணான புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறைஉயர் பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கலெக்டர், எஸ்பிக்கள் உள்பட பல அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டது. இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கலெக்டராக இருந்த உமாமகேஸ்வரிக்கு பதிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா ராமு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக இருந்த பாலாஜி சரவணன், சென்னைக்கு துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய நிஷா பார்த்திபன் புதுக்கோட்டை எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த டெய்சி குமார், கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக நாகையில் இருந்து பயிற்சி கலெக்டர் அபிநயா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். டவுன் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த செந்தில்குமார் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக லில்லி கிரேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் கூடுதல் எஸ்.பியாக கீதாவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பூவதியும், சுகாதாரத்துறை  துணை இயக்குநராக கலைவாணியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விஜயலட்சுமியும் பணியாற்றி வருகின்றனர்.  மாவட்டத்தில் ஏற்கனவே வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளில் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். பெண்களின் கோட்டையாக புதுக்கோட்டையை மாற்றப்பட்டள்ளதால் மகளிர் அமைப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெருமை சேர்த்த நாட்டின் முதல்பெண் மருத்துவர், சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டை மண்ணில் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தலைமை பொறுப்பேற்றுள்ள பெண்மணிகளின் பணிகள் சாமானிய மக்களுக்கானதாகவே அமையும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>