சிவகங்கையில் பரபரப்பு அதிமுக மாஜி அமைச்சர் பாஸ்கரன் மீது 11 ஏக்கர் கோயில் நில அபகரிப்பு புகார்: முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு

சிவகங்கை: சிவகங்கையில் 11 ஏக்கர் கோயில் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அபகரித்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை நகரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கவுரி பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் சிவகங்கையில் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335 மற்றும் 330ல் உள்ள சுமார் 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக இருந்த பாஸ்கரன் மற்றும் அவரது உறவினர்கள் அபகரித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக இடத்தை அபகரித்து அதில் கம்பி அமைத்து மிகப்பெரிய வணிக வளாகம் கட்டி வருகிறார். மேலும், அக்கட்டிடத்திற்கு விதிமுறைகளை மீறி மின் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே, கோயில் நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்க வேண்டும். அத்துடன் விதிமுறைகளை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மற்றும் இடத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: