கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் நிவாரண உதவித்தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கினார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் டெபாசிட், கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை, கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 29ம் அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையால் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் ‘தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்’ டெபாசிட் செய்ததற்கான சான்றிதழ்களை, அந்த குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார். மேலும், கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் வழங்கிடும் வகையில், பெற்றோர்களில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளுக்கு, அந்த குழந்தைகளின் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories:

>