ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய விவகாரம்: யூடியூப் சேனல் மதனின் மனைவி அதிரடி கைது

சென்னை: ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் யூடியூப் சேனலின் அட்மினான (நிர்வாகி) மதனின் மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 12 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ‘பப்ஜி’ மதனை பிடிக்க தனிப்படை பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான ‘பப்ஜி’யை, சேலத்தை சேர்ந்த மதன்(எ) பப்ஜி மதன் என்பவர் தனது யூடியூப் சேனல் மூலம் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும்போது சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி தனது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் சேலம், திருச்சி, சென்னை என தமிழகம் முழுவதும் மதன் மீது புகார் அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் தொடர் புகார்களை தொடர்ந்து போலீசார் மதனை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைகேல் என்பவர் யூடியூபர் மதன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், ெசன்னை புளியாந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தில் மதன் மீது அளிக்கப்பட்ட புகார்களும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூபர் மதன் மீதான விசாரணையை தொடங்கினர். அதேநேரம், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் படி அந்தந்த மாவட்ட போலீசார் மதனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் கைதில் இருந்து தப்பிக்க மதன் தலைமறைவாகிவிட்டான். அதேநேரம், காவல்துறைக்கு சவால் விடும் வகையில் மதன் வலைத்தளங்களில் ஆடியோ ஒன்றும் வெளியாகியது. அதைதொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மதனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க போலீசார் பல வகையில் முயற்சி செய்தனர். ஆனால் அவனை கைது செய்ய முடியவில்லை.

அதைதொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் தனிப்படை சேலம் ெசன்று நேற்று முன்தினம் மதன் நடத்திய யூடியூப் சேனலின் அட்மினாக (நிர்வாகி) உள்ள அவரது மனைவி கிருத்திகாவை அவரது 8 மாத குழந்தையுடன் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா மற்றும் சென்னை பெருங்களத்தூரில் வசித்து வரும் அவரது தந்தை மாணிக்கத்தையும் அழைத்து விசாரணை நடத்தினர். 12 மணி நேரம் நடத்திய விசாரணையில், மதனின் மனைவி கிருத்திகாவுக்கு அவரது கணவரின் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்துள்ளது. ஆனால் அதை அவர் தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், மதன் நடத்தி வரும் யூடியூப் சேனலின் அட்மின் என்பதாலும், மதனின் குற்றத்துக்கு துணை நின்றதாலும் கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு ேநற்று மாலை கைது செய்தனர். அவரது தந்தை மாணிக்கத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், கிருத்திகா மற்றும் அவரது தந்தை அளித்த தகவலின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக உள்ள மதனை பிடிக்க பெங்களூரு விரைந்துள்ளனர். அங்கு தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ள மதனை கைது ெசய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று வரை மதன் மீது தமிழகம் முழுவதும் 159 புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்களின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories:

>