கட்டுமான பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் குறைக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

சென்னை: கட்டுமானப்பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் குறைக்கவில்லை என்றால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை குறைப்பது தொடர்பாக அதன் உற்பத்தியாளர்களுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் கட்டுமான பொருட்களின் அதீத விலை ஏற்றத்தை அரசு வேடிக்கை பார்க்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார். எனவே அரசின் நிலைப்பாட்டை உணர்ந்து கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்தார். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்களிடையே எதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல் 28,000 ரூபாயாகவும் 3 யூனிட் கருங்கல் ஜல்லி 8,500 ரூபாயிலிருந்து 9,500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சில்லறை விற்பனையில் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 470 ரூபாய் முதல் 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல இரும்பு கம்பி, எம்சன்ட் ஆகியவற்றின் விலையும் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: