களக்காடு அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் தற்கொலை: போலீஸ் விசாரணை

களக்காடு: களக்காடு அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மீனவன்குளத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரெனிஸ் (25). கட்டிட தொழிலாளி. இவருக்கும், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்த வைகுண்டராஜன் மகள் சாந்தினி (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சாந்தினி களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், ரெனிஸ்க்கும் காதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து இருவருக்கும், பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவில் சாந்தினி வீட்டில் திடீர் என தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது வீட்டில் அவரது கணவர் உள்பட யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சாந்தினியின் உடல் மட்டும் கிடந்துள்ளது. மதியம் சாந்தினி தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு இங்கு பிரச்சினை செய்கிறார்கள் என்று கூறி உள்ளார். அதன்பின் இரவில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வைகுண்டராஜன் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

நாங்குநேரி டி.எஸ்.பி. ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ், களக்காடு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ரெனிஸ், சாந்தினி தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. மேலும் ரெனிஸுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே கணவருடன் ஏற்பட்ட தகராறில் சாந்தினி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வரதட்சனை பிரச்சினை உள்ளிட்ட வேறு காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி களக்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>