யூடியூப்பை பார்த்து சொந்தமாக தயாரித்த வெடிகுண்டுடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த இளைஞன்: போலீசார் பீதியடைந்ததால் பரபரப்பு

நாக்பூர்: நாக்பூரில் யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞன், அந்த வெடிகுண்டு வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அடுத்த நந்தன்வன் காவல் நிலையத்திற்குள், கையில் பையுடன் ராகுல் பகடே என்ற இளைஞன் நுழைந்தானர். அவன், ‘என்னுடைய பையில் வெடிகுண்டு உள்ளது’ என்று தெரிவித்தான். அதிர்ச்சியடைந்த போலீசார் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் குழுவிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சேர்வதற்குள், அந்த வெடிகுண்டு பையை ஸ்டேஷனின் வெளியே வைத்துவிட்டு, ராகுல் பகடேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது என்று முதலில் தெரிவித்தான். பின்னர் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், ​​யூடியூப்பைப் பார்த்து அவனே வெடிகுண்டு தயாரித்ததாக ஒப்புக்கொண்டான். அதையடுத்து, ராகுல் பகடேவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட ராகுல் பகடே மீது ஐபிசியின் பிரிவு 285, 286, இந்திய ஆயுதச் சட்டத்தின் பிரிவு 7,25 (1) (ஏ), ஐபிசியின் பிரிவு 123 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது குறித்து யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்துள்ளான்.

அதன்படி, பேட்டரி, மின் ஒயர், வெடிபொருள் உள்ளிட்ட சில பொருட்களை வாங்கிவந்து வெடிகுண்டு தயாரித்தான். ஆனால், அது வெடித்துவிடுமோ? என்ற அச்சத்தில் அதனை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துவிட்டான். வெடிபொருள் சோதனை பிரிவினர் ஆய்வு செய்ததில், தீவிர வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினர். இருந்தும், ராகுல் பகடே மீது வழக்குப்பதிந்து அவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories:

>