13% மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2 தவணையையும் செலுத்தி நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை மாநகரம்..!!

சென்னை: 13 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையையும் செலுத்தி நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை மாநகரம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. துரித நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2 தவணை தடுப்பூசிகளும் போட்ட மாநிலத்தில்  தற்போது சென்னை முதலிடம் பிடித்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக திண்டிவனத்தில் 9 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1.12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 77 ஆயிரத்து 116 ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கொல்கத்தா, குருகிராம் ஆகியன 12 சதவீத மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தி 2ம் இடத்தில் உள்ளன. 

குருகிராமில் 60 சதவீத மக்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டதன் மூலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றின் 2வது அலை வீசத் தொடங்கியது. தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர். முதலில் தடுப்பூசி செலுத்துவதில் மக்களுக்கு சிறிது தயக்கம் இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்துவது குறைவாக இருந்தது. 

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து சென்றதால் தமிழக மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் தயக்கத்தை உடைத்தெறிந்த மக்கள் ஆர்வத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டு கொள்கிறார்கள். இந்நிலையில் 13 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையையும் செலுத்தி நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை மாநகரம் உள்ளது.

Related Stories:

>