கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி வித்யா(25). கர்ப்பிணியான இவர், கடந்த 28ம் தேதி காய்ச்சல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வித்யாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆக்சிஜன் குறைவு காரணமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறுநீரகம், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக கடந்த 30ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்த குழந்தைகள் 1.5 கிலோ, 1.75 கிலோ, 1.3 கிலோ எடை கொண்டதாக இருந்தது. 3 குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. ஆனால் எடை குறைவாக இருந்ததால் அந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டன. குழந்தைகளுக்கு நவீன கருவி மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டன. இதனால் 3 குழந்தைகளுக்கும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் வித்யாவிற்கு கொரோனா சோதனையில் நெகடிவ் என வந்தது.

இதனைத் தொடர்ந்து 3 குழந்தைகளும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதால் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக டீன் நேரு தெரிவித்தார்.

Related Stories: