நாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு

மும்பை : நாட்டிலேயே முதல்முறையாக பச்சை பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிகிச்சைக்காக மும்பை கொண்டு செல்லப்பட்டார். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் விளைவாக இணை நோய்களும் வர தொடங்கின. அதில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட தொடங்கியது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த தொற்று எளிதில் பரவியது. ஆம்போடெரிசின் என்ற மருந்து இதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் தொடர்ந்து  ஒரு சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுத்தும் பாதிப்புகளை விட அதிக ஆபத்து நிறைந்தது என மருத்துவர்களால் கூறப்பட்டது. பின்னர் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டது. முக்கியமாக இணைநோய்களான சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களேயே இந்த பூஞ்சை நோய் தாக்குகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 34 வயது நபர் கடந்த 1.5 மாதமாக அரவிந்தோ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது நுரையீரல் 90% பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் பச்சை பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நோயாளி மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பை இந்துஜா மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனித உடலில் கருப்பு பூஞ்சையை விட பச்சை பூஞ்சையின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: