தட்டுப்பாடு எதிரொலி!: தமிழகத்தில் 1.41 லட்சம் பேர் 2வது டோஸ் போடவில்லை... ஐ.சி.எம்.ஆர்.நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: ஒன்றிய அரசு போதிய அளவில் தடுப்பூசி வழங்காத நிலையில் தமிழ்நாட்டில் தட்டுப்பாடு காரணமாக 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் குறிப்பிட்ட கால அளவிற்குள் கோவாக்சின் 2வது டோஸ் போடமுடியாமல் பரிதவிப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி முறையாக செலுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநில வாரியாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 

அதன் மூலம் தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் குறிப்பிட்ட கால அளவிற்குள் கோவாக்சின் 2வது டோஸ் போட தவறி இருப்பது தெரியவந்துள்ளது. கோவாக்சின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 4 முதல் 6 வாரங்களில் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் மே 2ம் தேதி கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் கடந்த 13ம் தேதிக்குள் 2வது டோஸ் செலுத்தி இருக்க வேண்டும். 

மே 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 408 பேர் கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டனர். அவர்கள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 589 பேர் மட்டுமே ஜூன் 13ம் தேதிக்குள் 2வது டோஸ் செலுத்திக்கொண்டனர். எஞ்சிய 1 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேர் 2வது டோஸ் போட தவறிவிட்டது தெரியவந்துள்ளது. 

அதே சமயம் 2வது டோஸ் செலுத்திக்கொள்ள மக்கள் தயாராக இருந்தும் ஒன்றிய அரசு போதுமான தடுப்பூசிகளை ஒதுக்காததே இந்த நிலைக்கு காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி வரை தமிழக அரசிற்கு ஒன்றிய அரசு 16 லட்சத்து 82 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. 

அவற்றில் 11 லட்சத்து 55 ஆயிரம் தடுப்பூசிகள் முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கும், 5 லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகள் 2வது தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கும் போடப்பட்டுள்ளது. 

Related Stories:

>