பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட்,தாய்/தந்தையை இழந்தோருக்கு ரூ. 3 லட்சம் நிதி : திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டு, அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகையை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் எனக் கூறி இருந்தார். இது தொடர்பான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ. 5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.அத்துடன் கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்,முதற்கட்டமாக சென்னை தலைமை செயலகத்தில் 10 குழந்தைக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார். கொரோனாவால் தாய், தந்தையை 70 பேரும், பெற்றோரில் ஒருவரை 2,656  குழந்தைகளும் இழந்துள்ளன.கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சிறப்புச் சலுகைகளை மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில அறிவிப்புகள்!!

* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

* இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்

Related Stories:

>