சட்டமன்ற தேர்தல் ஆவணங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது எது? அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர, 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த அவகாசம் ஜூலை 15ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்.எல்.ஏ.க்களின் தேர்தலை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர, அவர்களை தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூலை 15ம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  ராஜகோபால், தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு சில ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும் என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், எந்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறித்தும், எந்தெந்த ஆவணங்கள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: