மும்பை ஓட்டல் பார்ட்டியில் போதை பொருள் தமிழ் நடிகை அதிரடி கைது

மும்பை: ஓட்டலில் பிறந்தநாள் பார்ட்டி நடத்திய தமிழ் பட நடிகை, போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்டார். தமிழில் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த படம் மிருகா. இதில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஆகியோருடன் இணைந்து நடித்தவர் நைரா ஷா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து மும்பை ஜுஹு பகுதியிலுள்ள 5 நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார். தடபுடலாக நடந்த இவ்விருந்தில், போதை பொருள் சப்ளை அதிகமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அதிக போதை மயக்கத்தில் இருந்த நைரா ஷா மற்றும் அவரது நண்பர்களை போலீசார் சுற்றிவளைத்தனர்.

தொடர்ந்து பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த நைரா ஷா மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து வெளியான மருத்துவ அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவு போதை மருந்து நைரா ஷா மற்றும் அவரது நண்பர்களின் உடலில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நைரா ஷா மற்றும் நண்பர்கள் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிறகு நீதிமன்றம் நைரா ஷாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரத்தில் ஓட்டலில் இருந்து தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>