அபூர்வ நோயால் போராடும் மற்றொரு குழந்தை ரூ.18 கோடிக்கு மருந்து வாங்க உதவ வேண்டும்: கேரள ஐகோர்ட்டில் தந்தை மனு

திருவனந்தபுரம்: தசை வலுவிழப்பு நோயால் உயிருக்கு போராடும் 5 மாத குழந்தைக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.18 கோடி மதிப்புள்ள மருந்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் குழந்தையின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த அயான்ஷ் குப்தா என்ற குழந்தை அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தது. இந்த நோய்க்கான மருந்து அமெரிக்காவில் மட்டும் தான் கிடைக்கும். அதற்கான விலை ரூ.19 கோடி. இதையடுத்து, அந்த மருந்தை வாங்க உதவி செய்ய கேட்டு அதன் பெற்றோர் ஐதராபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த மருந்தை வாங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு ரூ.6 கோடியும், இறக்குமதி வரி விலக்கும் அளித்தது. மீதி தொகை சமூக வலைதளம் மூலமாக திரட்டப்பட்டு, மருந்து வாங்கப்பட்டது. இதேபோல், கேரளாவை சேர்ந்த ஒரு குழந்தைக்கும் பண உதவி கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் பகுதியை சேர்ந்தவர் ஆரீஸ். இவருக்கு இம்ரான் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து பல நாட்கள் ஆன பின்னரும் கை கால்களை அசைக்கவில்லை. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது தசை வலுவிழப்பு (ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி) பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நோயை ஒனாசெம்னோஜீன் என்ற மருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். இந்த மருந்து ஒரு டோஸ் விலையும் ரூ.18 கோடி. இதனால்,  ஐதராபாத் குழந்தைக்கு மருந்தை வரவழைக்க நடவடிக்கை எடுத்தது போல் தனது குழந்தைக்கும் உதவும்படி உத்தரவிட வேண்டும் என ஆரீஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி தெச்சுகுரியன் தாமஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக வரும் 28ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி சுகாதார துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார். தற்போது இந்த குழந்தை கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>