ஓராண்டு கடந்த நிலையிலும் கல்வானில் என்ன நடந்தது இன்னும் தெரியவில்லை: சோனியா, ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘கல்வானில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்து ஓராண்டாகியும், கல்வானில் என்ன நடந்தது என்று இன்னும் தெரியவில்லை,’ என சோனியா, ராகுல் குற்றம் சாட்டி உள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர்  வீரமரணம் அடைந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி அஞ்சலி செலுத்தினார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வீரமரணமடைந்த வீரர்களை நினைவுகூருவதில் நான், ஒரு நன்றியுள்ள தேசத்தில் சேர்கிறேன். இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன. இதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது இந்த அரசாங்கம் கடமை,’ என்று கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் இந்தியப் பகுதியை பாதுகாக்கத் தவறி விட்டார் என்ற ஹேஷ்டேக்கையும் ராகுல் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‘எல்லையில் சீன மீறல்கள் குறித்து எந்த தெளிவும் இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து தெளிவுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மறுத்துள்ளார். கல்வானில் நடந்த சம்பவம் குறித்து அரசு தேசத்திற்கு தெளிவுப்படுத்தும் என்று காங்கிரஸ் பொறுமையாக காத்திருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன் இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமரின் கடைசி வார்த்தை எந்த மீறலும் ஏற்படவில்லை என்பதுதான்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>