கல்வான் மோதல் முதலாண்டு நினைவு தினம் வீரமரணம் அடைந்த வீரர்களின் வீரத்தை போற்ற தேசிய சின்னம்: ராணுவம் அறிவிப்பு

புதுடெல்லி: கல்வான் பள்ளாத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களின் தியாகத்தின் நினைவாக தேசிய சின்னம் பொறிக்கப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தை தடுக்கும் போது நடந்த மோதலில், கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உட்பட இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி இச்சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வீர மரணமடைந்த 20 வீரர்களுக்கு இந்தியா ராணுவம் சார்பில் எல்லையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இது தொடர்பா்க இந்திய ராணுவம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையில், மிகவும் கடினமான உயரமான நிலப்பரப்பில் எதிரியுடன் சண்டையிடும் போது மிக உயர்ந்த தியாகம் செய்த வீரர்களின் வீரம், தேசத்தின் நினைவு  சின்னமாக பொறிக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை போற்று வகையில், ‘கல்வானின் ஹீரோக்கள்’ என்று பெயரில் பிரபல பாடகர் ஹரிகரன் பாடிய 5 நிமிட வீடியோவை ராணுவம் நேற்று வெளியிட்டது. அதில், உயரமான பனி படர்ந்த மலைகளின் மீது வீரர்களின் பணியாற்றுவதை விவரிக்கப்படுகிறது.

* இந்தியா-சீனா இடையே ராணுவம் இல்லா பகுதி

இரு நாட்டு எல்லைகளில் மோதல் ஏற்படுவதை தடுக்க தைரியமான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் தென் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் ஓய்வு பெற்ற சீன மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கல்வான் தாக்குதல் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘சீனாவும் இந்தியாவும் தற்போதுள்ள நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். எல்லைகளை கட்டுப்படுத்தும் வகையில் மிகவும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருதரப்புக்கும் பொதுவாக, ராணுவம் இல்லாத பகுதியை உருவாக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>