லோக் ஜனசக்தியில் அடுத்தடுத்து திருப்பம் சிராக் பஸ்வான், 5 எம்பி.க்கள் ஏட்டிக்கு போட்டியாக நீக்கம்

பாட்னா: லோக் ஜனசக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், அதிருப்தி எம்பிக்கள் 5 பேரையும் சிராக் பஸ்வான் கட்சியிலிருந்து நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த ஆண்டு அக்டோபரில் காலமானார். அவரைத் தொடர்ந்து கட்சித் தலைவராக பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் பொறுப்பேற்று, பீகார் தேர்தலை எதிர்கொண்டார். இதில் பாஜ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது.

இதனால் கட்சியிலிருந்து பலர் வெளியேறிய நிலையில், ராம்விலாஸ் பஸ்வானின் தம்பி பசுபதி குமார் பராஸ் தலைமையில் லோக் ஜனசக்தியின் 5 எம்பிக்கள் சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். சிராக் பஸ்வானிடமிருந்து கட்சியின் நாடாளுமன்ற தலைவர் பதவி பறிக்கப்பட்டு, பசுபதி குமார் நாடாளுமன்ற கட்சித் தலைவரானார். அதைத் தொடர்ந்து அதிருப்தி எம்பிக்கள் கூடி, கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வானை நீக்கியிருப்பதாக டிவிட்டரில் நேற்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில் சிராக் பஸ்வான் கட்சியின் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டினார். இதில், பராஸ் உட்பட அதிருப்தி எம்பிக்கள் 5 பேர் நீக்கப்பட்டதாகவும், கட்சி தலைவரை புதிதாக தேர்ந்தெடுக்க 5 நாளில் தேர்தல் நடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இனி யார் பொறுப்பில் கட்சி உள்ளது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்படும் என கூறப்படுகிறது. இதனால், பீகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: