சொத்து தகராறில் உறவினரை சுட்டு கொன்று பஞ். தலைவர் தற்கொலை

திருமலை: சொத்து தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு மண்டல பரிஷத் தலைவர் தானும் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவெந்துலா மண்டலம், நல்லபரெட்டிபள்ளியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, மண்டல பரிஷத் தலைவர் பிரசாத். இருவரும் உறவினர்கள். இவர்கள் இருவரின் குடும்பத்தினர் இடையே சொத்து பிரச்னை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை பார்த்தசாரதி, பிரசாத்தின் வீட்டிற்கு கத்தியுடன் சென்றார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசாத், உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து  வந்து பார்த்தசாரதியை சுட்டார். இதில், பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.  பின்னர், பிரசாத்தும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு, புலிவெந்துலா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இதேபோன்று கடந்த மார்ச்சில் பிரசாத்தை பார்த்தசாரதி பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக, காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related Stories:

>