முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் 22ம் தேதி காவிரி ஆணையம் கூட்டம்: மேகதாது அணைக்கு தடை விதிக்கப்படுமா?

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தின் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், வரும் 22ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய நான்கு மாநில நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தொடர்ந்து அதன் கூட்டமானது நான்கு மாநில உறுப்பினர்களுடன் நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்தாண்டு 28ம் தேதி ஆணையத்தின் 10வது கூட்டம் நடந்ததை அடுத்து, கொரோனா 2வது அலையின் காரணத்தினால் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், மத்திய ஜல்சக்தி துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி ஆணையத்தின் கூட்டம், அதன் இடைக்கால தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இதில் மத்திய ஜல்சக்திதுறை செயலாளர், தமிழகம் உட்பட நான்கு மாநில உறுப்பினர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்வார்கள்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தின் போது இதுவரை காவிரி ஒழுங்காற்று குழுவில் ஆலோசிக்கப்பட்ட விவரங்கள், தாக்கல் செய்யப்பட்ட நீர் புள்ளி விவரங்கள், அணை பாதுகாப்பு, காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கர்நாடகா திறந்து விட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

இதைத் தவிர, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. ஏனெனில், மேகதாவில் சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று குறுவை சாகுபடிக்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜல்சக்தி துறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கடிதம் எழுதி இருந்தார். முக்கியமாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை காவிரி ஆணையம் கருத்தில் கொள்ளும் பட்சத்தில், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தடை விதிக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

Related Stories:

>