இந்தியாவின் 26 மாநிலங்களில் தினசரி பாதிப்பு 1000க்கு கீழ் சரிந்தது கொரோனா 2வது அலை ஓய்கிறது: 85% தொற்று குறைந்ததாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது. 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தினசரி தொற்று 1000க்கு கீழ் சரிந்துள்ளது. இதில் பல மாநிலங்களில் பாதிப்பு 500க்கு கீழாக உள்ளது. பாதிப்பு உச்சத்தில் இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது 85 சதவீத தொற்று பரவல் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 2வது அலையில் இறப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி நடுவில் ஆரம்பித்த 2வது அலை ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு உச்சத்தை தொட்டு, கடந்த ஒன்றரை மாதம் மக்களை மிரட்டியது. ஜூன் தொடக்கத்தில் தினசரி சரியத் தொடங்கிய நிலையில், தற்போது 2வது அலை முடிவுக்கு வரத் தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் 4 லட்சம் வரை சென்ற தினசரி பாதிப்பு சென்றது. தற்போது, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 60,471 பேர் மட்டுமே புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 75 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவான தொற்று எண்ணிக்கையாகும். மொத்த பாதிப்பு 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயரித்து 881 ஆக உள்ளது. அதே போல், நேற்று ஒரே நாளில் 2,726 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 31 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்து 378 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 59,780 பேர் குறைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 95.64 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மே 6ம் தேதி தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 4 லட்சத்து 14 ஆயிரமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது தினசரி பாதிப்பு 85 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 26 மாநிலங்களில் தினசரி பாதிப்பு 1000க்கும் குறைவாக உள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரசேத்தில் 313, டெல்லியில் 131, குஜராத்தில் 405, மத்திய பிரதேசத்தில் 242, அரியானாவில் 268, பீகாரில் 324, கோவாவில் 253, இமச்சலில் 326, சண்டிகரில் 50, மணிப்பூரில் 459, நாகலாந்தில் 109, லடாக்கில் 50, சிக்கிமில் 36, மிசோரமில் 267, லட்சத்தீவில் 27, அந்தமானில் 8 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா (8,129), கர்நாடகா (6,835), கேரளா (7,719) ஆந்திரா (4,549), ஒடிசா (4,339), மேற்கு வங்கம் (3,519) ஆகிய மாநிலங்களில் மட்டும் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களிலும் தினசரி பாதிக்கப்டுவோரை விட குணமடைவோர் 2 மடங்கு அதிகமாக இருப்பதால் விரைவில் 2வது அலை ஓய்ந்து விடும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* மாநிலங்களுக்கு மேலும் 47 லட்சம் தடுப்பூசிகள்

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலங்களுக்கு இதுவரையில் 26 கோடியே 69 லட்சத்து 14 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் 25 கோடியே 67 லட்சத்து 21,069 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மாநிலங்களிடம் தற்போது 1 கோடியே 5 லட்சத்து 61,861 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. அடுத்தக்கட்டமாக, 3 நாளில் 47 லட்சத்து 43,580 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

* தடுப்பூசியால் முதல் மரணம்

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்பட்ட பாதிப்பால் முதல் மரணம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு பிறகு ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் ஏஇஎப்ஐ எனும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு இதனை உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 8ம் தேதி, தடுப்பூசி எடுத்துக் கொண்ட 68 வயதுடைய நபர் ஒருவர் அனாபிளாக்சிஸ் எனப்படும் அலர்ஜி காரணமாக  உயிரிழந்துள்ளார். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு 31 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே தடுப்பூசி பக்கவிளைவால் பலியாகி இருப்பதாக ஏஇஎப்ஐ அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது.

Related Stories: