ஒரே ஆண்டில் 5 முதல் 30 வரை அதிகரிப்பு அணு ஆயுதங்களை குவிக்கும் இந்தியா, சீனா, பாகிஸ்தான்: மிகப்பெரிய மோதலுக்கு வழி வகுக்குமா?

புதுடெல்லி: இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய 9 நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்கள் வைத்துள்ளன. இந்த 9 நாடுகளில் மொத்தம் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் அணு ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யாவிடம் உள்ளது. ரஷ்யாவிடம் 6,255, அமெரிக்காவிடம் 5,550, பிரான்சிடம் 290, பிரிட்டனிடம் 290, இஸ்ரேலிடம் 90, வட கொரியாவிடம் 40-50 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்நிலையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக சுவீடனை தலைமையிடமாக வைத்து செயல்படும், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது.

அந்த புத்தகத்தில், ‘கடந்தாண்டு ஜனவரியில் இந்தியா 150, சீனா 320, பாகிஸ்தான் 160 என அணு ஆயுதங்களை வைத்திருந்தன. இந்தாண்டு ஜனவரியில் இந்தியா இதை 156, சீனா 350, பாகிஸ்தான் 165 ஆக அதிகரித்து உள்ளன. அமெரிக்கா, ரஷ்யாவை தவிர்த்து மற்ற நாடுகளும் அணு ஆயுதங்களை தயாரிப்பதுடன், புதிய ஆயுதங்களை உருவாக்கவும் முயற்சித்து வருகின்றன. சீனா தனது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது. அதேபோல், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன.

இந்தியா தனது சொந்த முயற்சியினாலும், சொந்த தொழில்நுட்பங்கள் மூலமாகவும் அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவதுடன், அதி கரித் தும் வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக சீனாவும், பாகிஸ்தானும் கைகோர்த்து எல்லையில் மோதல் போக்கை உருவாக்கி வருகின்றன. இவ்விரு நாடுகளும் எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அதை சமாளிப்பதற்கு மத்திய அரசு ராணுவத்தை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த மூன்று நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுதங்களை குவிப்பதால், எதிர்காலத்தில் மோதலில் மிகப்பெரிய அழிவுக்கு வழி வகுக்கக்கூடும் என ராணுவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

* கதிரியக்க அச்சுறுத்தலா?

சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் தைஷான் அணுமின் நிலையம் உள்ளது. இதில் இருந்து சமீபத்தில் கசிவு ஏற்பட்டு, பாதிப்புகள்  ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‘அணுமின் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் அசாதாரண சுற்றுச்சூழல் கதிரியக்க நிலை இல்லை. பொதுமக்கள் ‘பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது’. சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை,’ என்றார்.

Related Stories:

>