பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு வழங்க முடியாது

புதுடெல்லி: ‘மத்திய அரசுக்கு கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோஸ் ரூ.150 விலைக்கு தருவது கட்டுப்படியாகாது’ என பாரத் பயோடெக் நிறுவனம் கூறி உள்ளது.  நாடு முழுவதும் வரும் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 18-44 வயதினர்களுக்கு மாநில அரசுகள் தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கி வந்த நிலையில், இனி அதையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக தர உள்ளது. இதற்காக, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் 75 சதவீத தடுப்பூசியை மத்திய அரசு வாங்கிக் கொள்ளும். மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றுக் கொள்ளலாம். மத்திய அரசை பொறுத்த வரையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளையும் ஒரு டோஸ் ரூ.150 என்ற குறைவான விலையில் வாங்கி வருகிறது. இதே தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ரூ.400 என்ற விலையில் விற்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு ஒரு டோஸ் ரூ.600க்கும் கோவாக்சின் ரூ.1200க்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில், 75 சதவீத தடுப்பூசியை மத்திய அரசே வாங்க இருப்பதால், தயாரிப்பு நிறுவனங்கள் தற்போதைய கொள்முதல் விலை இன்னும் சற்று குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டுமென மத்திய அரசு சமீபத்தில் வலியுறுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150 விலைக்கு தொடர்ந்து வழங்க முடியாது என அதன் தயாரிப்பு நிறுவனமான ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘மத்திய அரசுக்கு ஒருடோஸ் கோவாக்சின் தடுப்பூசி ரூ.150 விலையில் தருகிறோம். இதனால் உற்பத்தி திறன் பாதிக்கிறது. நீண்ட நாட்கள் இவ்வாறு வழங்க முடியாது. உற்பத்தி திறன் பாதிப்பை சரிகட்டவே, தனியார் சந்தைக்கு அதிக விலை நிர்ணயிக்க வேண்டி வருகிறது’ என கூறி உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்திகாக தயாரிப்பு பணிகளை மேம்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்திக்கான வசதிகளை அமைத்தல் போன்றவைகளுக்காக முன்கூட்டியே ரூ.500 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>