மீனவர்களுக்கு இத்தாலி வழங்கிய ரூ.10 கோடி பணத்தை பிரித்து தர தனி நீதிபதி நியமனம்

புதுடெல்லி: கடந்த 2012ம் ஆண்டு, பிப்ரவரி 15ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் கேரள கடல் எல்லையில் மீன்பிடித்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ‘என்ரிகா லாக்ஷி’ என்ற எண்ணெய் கப்பலில் பாதுகாப்புக்கு வந்த அந்நாட்டு கடற்படை வீரர்கள், மீனவர்களை துப்பாக்கியால் சுட்டதில் அஜிஸ்பிங்க், ஜலஸ்டின் ஆகியோர் உயிரிழந்தனர், மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இத்தாலி வீரர்கள் மிசிமிலியோனோ லத்தோர், சல்வடோர் கிரோனோ கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு ரூ.10 கோடி  இழப்பீடு வழங்க முன்வந்தது.

இதனால், இந்த வழக்கை முடித்து வைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா அமர்வு, இந்த வழக்கில் ஜூன் 15ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்குவதாக கடந்த 12ம் தேதி தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ‘இத்தாலி அரசு வழங்கியுள்ள ரூ.10 கோடி இழப்பீடு தொகையை, கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும். துப்பாகிச்சூட்டில் இறந்த அஜிஸ்பிங்க், ஜலஸ்டின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 கோடி வழங்க வேண்டும். மீதமுள்ள ரூ.2 கோடியை துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கும், படகு உரிமையாளருக்கும் பிரித்து வழங்க வேண்டும். இதை நிறைவேற்றுவதற்காக தனி நீதிபதி ஒருவரை கேரள உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் ’ என்று தெரிவித்தனர்.

Related Stories:

>