ஹரித்துவாரில் நடந்த முறைகேடு போலி கொரோனா சான்றிதழ் கொடுத்து கும்பமேளாவில் லட்சம் பேர் பங்கேற்பு: விசாரணைக்கு உத்தரவு

ஹரித்துவார்: ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனா பரிசோதனைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு லட்சம் போலி நெகட்டிவ் சான்றிதழ்களை வழங்கியது அம்பலமாகி உள்ளது. உத்தரகாண்டில் உலகளவில் பிரபலமான கும்பமேளா, கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே விழா நடத்த அனுமதிக்கப்பட்டதால், விழாவில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் உத்தரகாண்ட் அரசு ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், கொரோனா இல்லை என்று சான்று அளிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்ச்சிக்கு பின் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணையில், ஒரு லட்சம் பேருக்கு போலியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒரே செல்போன் எண்ணில் 50 பேர் பரிசோதனைக்கு பதிவு செய்து இருப்பதும், ஒரு ஆன்டிஜென் பரிசோதனை கிட்சை பயன்படுத்தி 700 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்ததுள்ளது. தனியார் அமைப்பில் மாதிரி சேகரித்தவர்கள் 200 பேர் மாணவர்கள் என்பதும், தரவுகளை பதிவு செய்தவர்கள் ராஜஸ்தானில் குடியிருப்பவர்கள் என்பதும் யாரும் ஹரித்துவாரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. மாதிரி சேகரிப்பவர்கள் அங்கு இருந்து மக்களிடம் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால், அந்த எண்ணிக்கையை பூர்த்தி செய்வதற்காக போலி ஆவணங்களை தயாரித்து சமர்பித்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: