கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு: மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.30 கோடி செலவில் ஒரு நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் எந்திரத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பிகேசேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அங்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்துக்கு இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 30 தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் இதுவரை 1 கோடியே 5  லட்சத்து 97 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று  (நேற்று முன்தினம்) இரவு வரை 71 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் கையிருப்பில்  இருந்தது.  இந்தநிலையில் 6 லட்சத்து 16 ஆயிரத்து 660 தடுப்பூசிகள்  ஐதராபாத்தில் இருந்தும், புனேவில் இருந்தும் வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக பிரித்தனுப்பும் பணி நடந்து வருகிறது. எனவே தடுப்பூசி  தட்டுப்பாடு இல்லாமல், அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது.‘தமிழகத்தில் கோவை, பொன்னேரி, செங்கல்பட்டு, உள்பட 5 இடங்களில் நிரந்தர ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க உதயநிதி ஸ்டாலினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், முதல் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது அலை வந்தாலும்,  3வது அலை குழந்தைகளை தாக்கும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும், 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளும் திறந்து வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது’ என்றார்.

Related Stories:

>