புதுவை சபாநாயகராக செல்வம் போட்டியின்றி தேர்வு: இன்று பதவியேற்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்படுள்ளார். இன்று அவர் பதவியேற்கிறார். புதுச்சேரி சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல் இன்று (16ம்தேதி) நடைபெறவுள்ளதாக சட்டசபை செயலர் முனிசாமி அறிவித்தார். இதற்காக என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி சார்பில் மணவெளி தொகுதி பாஜக எம்எல்ஏ செல்வம் வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். நேற்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கலுக்கான காலக்கெடு முடிந்தது. வேறு எம்எல்ஏக்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது செல்வம் சபாநாயகராக பதவியேற்பார். கடந்த 2001ல் புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக சார்பில் ரெட்டியார்பாளையம் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பிறகு 20 ஆண்டுகளாக பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு தேர்வு செய்யப்படவில்லை. தற்போது நடந்த தேர்தலில் 6 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மணவெளி தொகுதி எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்.

Related Stories: