நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகி மற்றொரு வழக்கில் கைது

கரூர்: திருச்சியை அடுத்த திருவெறும்பூர் சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (33). இவரது கார் நிறுவனத்தில் நாம் தமிழர் கட்சி முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான துரைமுருகன், திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வினோத், கட்சி நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞரை பற்றி அவதூறாக 14 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டதாக திருவிடைமருதூர் திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கரூரில் கடந்த மார்ச் 15ம்தேதி திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவின்போது, கரூர்தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியது போல அவதூறான வீடியோக்கள் துரைமுருகனின் யூ டியூப்பில் வெளியானது.

இது குறித்து கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குடியரசு, ஆதாரத்துடன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடந்த 8ம்தேதி புகார் அளித்தார். ஏற்கனவே வேறொரு வழக்கில், கைதாகி திருச்சி மாவட்டம் லால்குடி கிளை சிறையில் உள்ள துரைமுருகனை கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கின் கீழ் கைது செய்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் மீண்டும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>