தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை அனுமதியற்ற கட்டிடங்களுக்கு வரன்முறை கோருவதை ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தீயணைப்பு வாகனம் கூட போக முடியாத நிலையில் அனுமதியற்ற கட்டுமானங்களை வரன்முறைபடுத்த கோருவதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பாலவிக்னேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பாளையங்கோட்டை பகுதியில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள், மத நிறுவனங்கள், மருத்துவக்கல்லூரி மற்றும் சித்தா கல்லூரி, மத்திய சிறைச்சாலை உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த பகுதி அதிகளவில் வணிகரீதியான கட்டிடங்கள் நிறைந்தவை. இங்கு கட்டிட மற்றும் பாதை விதிமீறல் இருப்பதாக கூறி உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் - செயலாளரால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் பலரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய, தொடர் கட்டிட பகுதி என மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி, அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், அனுமதியற்ற கட்டுமானங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல நகரங்களில் இந்த நிலை தான் உள்ளது. இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைக்கு போதிய இடம் இல்லாமல், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டிடங்களை கட்டிவிட்டு, பின்னர், வரன்முறைப்படுத்த வேண்டும். அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. தற்போதுள்ள நிலையில் இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories:

>