சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வெப்சைட்டில் பதிவேற்ற கோரி வழக்கு: பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வெப்சைட்டில் பதிவேற்றக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், ஒய்.புதுப்பட்டியைச் சேர்ந்த அமுதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இலவச ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள தனியார் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மெட்ரிக் பள்ளிகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனால், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இதனால் பலரது வாய்ப்புகள் பறிபோகிறது.

எனவே, வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்களையும் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசின் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படும்’’ என்றார். இதனையடுத்து நீதிபதிகள், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், பள்ளி கல்வித்துறை மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: