ஜல் ஜீவன் திட்டத்திற்காக தமிழகத்துக்கு ரூ.3,691 கோடி மத்திய நீர்வள துறை மானியம்

புதுடெல்லி: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய நீர்வள அமைச்சகம் ரூ.3,691 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்க 2019ம் ஆண்டு பிரதமர் மோடி ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கினார். அதன்படி, தமிழகத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான மானிய தொகையாக ரூ.3,691 கோடி மத்திய நீர்வள அமைச்சகத்தால் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 2019-2020 ஆண்டில் வழங்கியதை விட மூன்று மடங்கு அதிகமாகும். அப்போது ரூ.921 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகையால் 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான, சுகாதாரமான நீர் தமிழகத்தில் வழங்குவதை உறுதி செய்ய முடியும். இதைத்தவிர தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 1.26 கோடி வீடுகளில் 40.36 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 22 மாதங்களில் மட்டும் 18.70 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் வழி நீர் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய அளவும் தமிழகத்தில் 86.53 லட்சம் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.

இதில், 2020-21 ஆண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழி நீர் வழங்கப்பட்டு, அடுத்த மூன்று ஆண்டுகளில் திட்டங்கள் முடிக்கப்பட்டு கிராமபுறத்தில் அனைத்து வீடுகளுக்கும் நீர் வழங்குவதை உறுதி செய்யப்படும். மேலும், 2021-22 ஆண்டிற்கான திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய நீர்வள அமைச்சகத்திடம் மாநில அரசு சமர்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டத்தை முடிக்கும் விதமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், குழாய்வழி நீரினை கொடுக்கப்படும் அனைத்து கிராமப்புறங்களிலும் திட்டம் தொடங்கப்பட வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்கு மத்திய நீர்வள துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மேலும் ரூ.8,436 கோடி

மத்திய நீர்வள அமைச்சகம் தனது கடிதத்தில் மேலும், ‘தமிழக கிராமபுறங்களில் வீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8,436 கோடி வழங்கப்பட உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

* உ.பி.க்கு தாராளம்

ஜல்ஜீவன் திட்டத்துக்கு அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.10,870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டராவுக்கு ரூ.7,064.41 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.6,998.97 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.5,117 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: