சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியை கொலை செய்த வழக்கில் ஒப்பந்த ஊழியர் கைது

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி, நோயாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையின் 3வது மாடியில் சிகிச்சை பெற்று வந்த சுமிதாவின் உடல் 8வது மாடியில் உள்ள மின்பகிர்மான அறையில் மீட்கப்பட்டது. நோயாளி சுமிதாவை பணம் மற்றும் செல்போனுக்காக கொலை செய்ததாக ரதிதேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் தேதி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த மவுலி என்பவரது மனைவி சுமிதா கொரோனா சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூன்றாவது மாடியில் அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் 23ஆம் தேதி மவுலி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்க்கும் போது அவரது மனைவி படுத்திருந்த படுக்கையில் இல்லை. இதுதொடர்பாக உடனடியாக மருத்துவ நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு ஊழியர்களும் தேடி பார்த்தனர். தொடர்ந்து தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அருகில் இருக்கும் பூக்கடை போலீசாரிடம் மவுலி புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து 10 நாட்களாக தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மனைவியை தேட முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி அவரது மனைவி சுமிதாவின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 8வது மாடியில் மின்பகிர்மான அறையில் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

துர்நாற்றம் வீசுவதை அறிந்த அங்கிருக்கும் நோயாளிகளும் ஊழியர்களும் உடலை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒப்பந்த ஊழியராக இருந்த ரதிதேவி என்பவர் பணத்திற்காக சுமிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து மின்பகிர்மான அறையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் ரதிதேவி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>