×

பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிபிசிஐடி திட்டம் !

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கிய சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 புகார்கள் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார். மேலும், மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கினர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி மூலம் 3 தனிப் படைகள் அமைக்க்ப்பட்டு ஒரு குழு சிவசங்கர் பாபாவிடம் விசாரணை மேற்கொள்ள டேராடூன் விரைந்துள்ளது. 2ம் குழு சிவசங்கர் பாபாவின் செல்போன் டவர் லொக்கெஷனை வைத்து இருப்பிடத்தை கண்காணித்து, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுஷில் ஹரி பள்ளியில் மொத்தம் 73 ஆசிரியர் ஆசிரியைகள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவிற்கு உதவிய ஆசிரியர், ஆசிரியைகள் யார் யார் என புகார் அளித்துள்ள மாணவிகள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பட்டியலெடுத்து அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், மாமல்லபுரம் காவல் துறையினர் தங்களின் முதல் தகவல் அறிக்கையில் ஏற்கனவே சுசில் ஹரி பள்ளியைச் சேர்ந்த பாரதி, தீபா ஆகிய இரு ஆசிரியைகளின் பெயரை சேர்த்துள்ள நிலையில் முதற்கட்ட விசாரணை அவர்களிடமிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி. ஐ.டி போலீசார் அழைப்பு விடுப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sivashankar Baba ,CBCID , sex case, Sivashankar Baba, look out notice
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...