கேரள மீனவர்கள் இத்தாலி பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு முடித்துவைப்பு

டெல்லி: கேரள மீனவர்கள் இத்தாலி பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி அரசு வழங்கிய 10 கோடி ரூபாய் இழப்பீடு திருப்தி அளிப்பதாக கூறி இதுதொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. கடந்த 2012ஆம் ஆண்டு இத்தாலி கடற்படையினரால் கேரளா மீனவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிராக கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு ராஜாங்க ரீதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு வீரர்களும் நிபந்தனை அடிப்படையில் இத்தாலிக்கு திரும்பி அனுப்பப்பட்டனர். ஆனால் நிபந்தனைகளை மீறிய இத்தாலிய அரசு 2 வீரர்களையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடியாது என தெரிவித்தது.

இதற்கு இடையில் 2 வீரர்கள் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கும் இத்தாலிய அரசு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதன்படி இத்தாலிய அரசு வழங்கிய 10 கோடி ரூபாய் இழப்பீடு என்பது திருப்தி அளிப்பதாக இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 கோடி ரூபாயும், மீதமுள்ள 2 கோடியை படகு உரிமையாளருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்ததாகவும் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

Related Stories: