×

திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது காவிரி நீர்!: அதிகாலையில் கல்லணையை வந்து சேரும் என எதிர்பார்ப்பு..!!

திருச்சி: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பை வந்தடைந்த நிலையில் அதிகாலையில் தஞ்சை கல்லணையை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை முதல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 


இந்த தண்ணீர் அதிகாலையில் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறுவை சாகுபடிக்காக நாளை முதல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்று அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கின்றனர். இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


தண்ணீர் திறப்பை ஒட்டி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் வர்ணம் பூசப்பட்டு புது பொலிவோடு காட்சி அளிக்கின்றன. பாலத்தில் உள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜன், அகத்தியர், காவிரி அம்மன் சிலைகளில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. 


இதனிடையே திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் வரவேற்றனர். ஆற்றில் நெல் மணிகள் மற்றும் மலர்களை தூவி அவர்கள் வரவேற்றனர். முசிறி, தொட்டியம் தாலுகாவில் பாசனத்திற்கான முக்கிய வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 


இந்த தாலுகாக்களில் வடகரை வாய்க்கால், காட்டு வாய்க்கால், காட்டுப்புத்தூர் வாய்க்கால் ஆகியவை தூர்வாரும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வாய்க்காலில் உள்ள குப்பைகள், மரத்துண்டுகள், தேங்கி கிடக்கும் மணல் முகடுகள் அகற்றப்பட்டு கடைமடை வரை காவிரி நீர் செல்லும் வகையில் முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன. 



Tags : Thrichi , Trichy Trident, Cauvery Water
× RELATED திமுக கூட்டணியில் திருச்சி...