புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரும் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டம்

டெல்லி: பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரும் விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2வது தீவிரத்திற்கு மத்தியில் போராட்ட களத்தில் இருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய போராட்டத்தை விவசாயிகள் இப்போதும் தொடர்கின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் வேளாண் சட்ட விரோதம் எதிரொலித்ததை காண முடிந்தது. இந்த நிலையில் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் விவசாயிகள் அடங்கிய பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஏற்கனவே 12 கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்க பிரதிநிதிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர்த்து வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் வரும் 26ஆம் தேதியன்று அனைத்து மாநில ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்து மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதை விவசாயிகள் அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ், திமுக. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனையாக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களையும் கருத்தில் கொண்டு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒருசில முக்கிய அம்சங்களை நிறைவேற்றவும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கவும் மத்திய அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்து வரும் நாள்களில் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தீவிரமடையுமா அல்லது மத்திய அரசு தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: