மீன்பிடி தடை காலம் முடிந்தது மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்

தண்டையார்பேட்டை:  கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் திருவள்ளுவர் மாவட்டம் ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் 28 குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை கொண்ட படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 28 குதிரை திறனுக்கு குறைவான நாட்டு படகுகள், பைப்பர் படகுகள், கட்டுமரங்கள் கொண்டு மீன்பிடிக்க தடை இல்லை.  தடைகாலம் காரணமாக கடந்த ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிக விசைதிறன் கொண்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டதால், விலை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், மீன்பிடி தடைகாலம் நேற்று முடிவுக்கு வந்ததையொட்டி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று இரவு முதல் கடலில் மீன்பிடிக்க படகுகளில் சென்றனர். முன்னதாக, மீன்பிடிக்க தேவையான ஐஸ் கட்டிகள், உணவு பொருட்கள், வலைகள், டீசல் ஆகியவற்றை தயார் செய்தனர்.  61 நாட்கள் கழித்து மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் எனவும், மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

>