வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா கண்டறியப்படவில்லை என பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்களை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், 3ம் தேதி நீலா என்கிற பெண் சிங்கம் கொரோனாவால் இறந்தது. இதனையடுத்து, பூங்காவில் உள்ள 14 சிங்கங்களில் 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானது. இதுபோல், 4 புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், 10 சிங்கங்களில் 2 வயதான பெண் சிங்கங்கள் மட்டும் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.   இந்நிலையில், நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அதிகாரிகளுடன் பூங்காவில் கொரோனா பாதித்த சிங்கங்கள் பகுதி, சிங்க உலவுமிடம், புலி மற்றும் புதிதாக குட்டியை ஈன்ற சிம்பன்சி குரங்கு, யானை உள்ளிட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார். மேலும், பூங்கா மருத்துவர்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லூரி பேராசியர்கள் ஆகியோரிடம் விசாரித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், ‘தமிழக முதலமைச்சர் பூங்காவுக்கு நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் சிங்கங்களுக்கு தீவிர சிக்கிசை அளிக்கப்படுகிறது. இதில், 10 சிங்கங்கள் கொரோனாவில் இருந்தாலும் வயது முதிர்ந்த சிங்கங்கள் சிறிது சோர்வாக உள்ளது. அவைகளுக்கும் மருத்துவர்கள் தீவிர சிக்கிசை அளித்து வருகிறார்கள். இதுபோல், புலிகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதனால், மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவியதாக தகவல் இல்லை. அது வெறும் வதந்தியே.  முதுமலையில் உள்ள 18 யானைகளுக்கும் கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது. அதனால், சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவவில்லை. விலங்கு பராமரிப்பளர்களுக்கு 100 சதவீகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது உறுதி செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories:

>