நகை கடையில் 5 லட்சம் திருடிய போலீசார் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? போலீஸ் கமிஷனர் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை பூக்கடை காவல் நிலைய போலீஸ்காரர்கள் முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோர் கடந்த வாரம் இரவு பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு நகை கடையில் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணம் எண்ணிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார், சோதனைநடத்துவது போல் கல்லாவில் இருந்த 5 லட்சத்தை எடுத்து சென்றனர். இதுகுறித்து பூக்கடை போலீசில் கடை உரிமையாளர் புகார் செய்தார். போலீஸ் அதிகாரிகள் இதுபற்றி விசாரித்தபோது, முஜிப்ரகுமான், சுஜின் ஆகியோர் பணத்தை திருடியதும், இவர்களுக்கு உடந்தையாக எஸ்ஐ கண்ணனும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்தது. அதன் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, நகைக்கடையில் பணத்தை திருடிய போலீஸ்காரர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யாதது ஏன், காவலர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை எடுக்காத காவல் நிலைய ஆய்வாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர்  4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>