போலீஸ் வாகனம் உட்பட 5 வாகனங்கள் உடைப்பு: போதை கும்பலுக்கு வலை

சென்னை: அம்பத்தூர், ஐசிஎப் காலனி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோகுல் (20). இவர், நேற்று மாலை அதே குடியிருப்பில் நடந்து சென்றபோது, அங்கு போதையில் இருந்த சில வாலிபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதுபற்றி அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஜீப்பில் வந்த போலீசார், கோகுலை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த பிரவீனை பிடித்தனர். போலீசார் கையை தட்டிவிட்டு தப்பிய அவர், சிறிது நேரத்தில் 4 வாலிபர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் அங்கு  வந்துள்ளார். அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு, திடீரென அங்கிருந்த கற்களை கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால், போலீசார் தப்பி ஓடி உள்ளனர்.

இதையடுத்து, போதை கும்பல் அங்கிருந்த இரண்டு ஆட்டோ, ஒரு கார், ஒரு வேன் ஆகிவற்றை கற்களால் அடித்து உடைத்ததுடன், ரோந்து ஜீப்பின் கண்ணாடியையும் கல் வீசி உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், தாக்குதலில் ஈடுப்பட்ட அதே பகுதியை சேர்ந்த சாரதி, ஜீவன், சூர்யா, பிரவின் உள்ளிட்டோர் என தெரியவந்தது. தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>