தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது டீ, சலூன், டாஸ்மாக் கடைகள் திறப்பு: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது

பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதியால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் மேலும் பல  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. டீக்கடைகள், சலூன், பூங்காக்கள் மற்றும் டாஸ்மாக்  ஆகியவை திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பணியும் தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்காக்களில் வாக்கிங் செல்ல அனுமதிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த  தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர இதர 27 மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அழகு நிலையம், சலூன் கடைகள் குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதிப்பட்டதால், அந்த காலையிலேயே கூட்டம் அலைமோதியது.இதேபோல், அழகு நிலையங்களுக்கு பெண்கள் படையெடுத்தனர்.

நடைபயிற்சிக்காக பூங்காக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. இதனால், காலையில் ஏராளமானோர் நடைபயிற்சி சென்றனர்.  இதேபோல, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளும் நேற்று முதல் தொடங்கியது. இதர தொழிற்சாலைகளும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஊழியர்கள் இபாஸ் வைத்து பைக்கில் சென்றனர். ஐடி நிறுவனங்கள் 20 சதவிகித பணியாளர்கள் அல்லது 10 பேர் மட்டும் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள்  திறக்கப்பட்டதால் ,காலை முதல் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

மேலும், டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, டீக்கடைகளுக்கு வந்தவர்கள் பார்சலில் மட்டும் டீ, காபி வழங்கப்பட்டன. கடைக்கு முன் கூட்டம் சேர வேண்டாம் என உரிமையாளர்களும் அறிவுறுத்தினர். மேலும், ரோந்து சென்ற காவல்துறையினர் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றனர். பேக்கரிகள், உணவகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை பார்சல் முறை விற்பனையை தொடங்கின. பொதுமக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் இயங்கின. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணி தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படதை தொடர்ந்து, நேற்று முதல் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அதிகளவில் வெளியில் சுற்றாமல் இருக்க போலீசார் வாகன சோதனையை தொடர்ந்தனர். அத்தியாவசிய பணிகளுக்கு சென்றவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற தேவைகளுக்கு சென்றவர்கள் இ-பதிவு இருந்தால் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories:

>