கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: அரசுக்கு கட்சி தலைவர்கள் கோரிக்கை

சென்னை: சிமென்ட், கம்பி விலை நிர்ணயத்தை அரசு கண்காணிக்க வேண்டும்; விலை உயர்வை தடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  வைகோ(மதிமுக,பொதுச் செயலாளர் ): கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான  விலையேற்றம் அதிர்ச்சி தருகிறது. சில்லரை விற்பனையில் 410 ரூபாய் முதல் 430  ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட் தற்போது ரூ.470 - 520  ஆக அதிகரித்துள்ளது. இரும்புக் கம்பி ஒரு கிலோ ரூ.60 லிருந்து ரூ. 70 -  75 ஆகவும், ரூபாய் 3600க்கு விற்கப்பட்ட எம்-சாண்ட் ஒரு யூனிட் 4000  ரூபாய் ஆகவும், ரூ.4600க்கு விற்பனையான வி-சாண்ட் ஒரு யூனிட் ரூ.5100  ஆகவும் உயர்ந்துள்ளது. 23 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல்  28 ஆயிரம் ரூபாயாகவும், 3 யூனிட் கருங்கல் ஜல்லி ரூ. 8500 லிருந்து ரூ.  9500 ஆகவும் அதிகரித்துவிட்டன.

கொரோனா காலத்தைப்  பயன்படுத்தி கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதையும் தடுத்து  நிறுத்தி கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  தமாகா தலைவர்  ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): ஏப்ரல் மாதம் விற்கப்பட்ட, மணல், ஜல்லி, கம்பியின் விலை, இந்த ஜூன் மாதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலை உயர்வால் சிறிய, பெரிய கட்டுமான நிறுவனங்களும் சொந்தமாக வீடுகட்டுபவர்களும் தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். கொத்தனார், சிற்றாள், கம்பிகட்டுனர், உதவியாளர்கள், போன்றோர் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ஆகவே தமிழக அரசு உடனடியாக கட்டுமான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: