தேவேந்திர குல வேளாளர் சட்ட திருத்தத்திற்கு எதிராக வழக்கு

மதுரை:  தமிழ்நாடு வாதிரியார் மகாஜன சங்க செயலாளர் தர்மநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் சமூகத்தினர் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் வசிக்கின்றனர். எங்களது சமூகம் எஸ்சி பட்டியலில் உள்ளது. குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளர் மற்றும் வாதிரியான் ஆகிய சமூகங்களை தேவேந்திர குலவேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க கோரிக்கை இருந்தது. ஆனால், வாதிரியான் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பிரிவில் சேர்க்க வேண்டாமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிடமும் எங்களது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதை ஏற்று குழு பரிந்துரைத்தது. ஆனால், முந்தைய அரசு  பரிந்துரைத்தன் அடிப்படையில் 7 உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே, அந்த சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தும், ரத்து செய்தும் உத்திரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். , ‘‘சட்ட திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் தலையிட முடியுமா என பார்க்க வேண்டியுள்ளது. எனவே, நேரடி விசாரணை நடக்கும்போது விசாரிக்கலாம்’’ எனக் கூறி, விசாரணையை நீதிபதிகள்  ஒத்தி வைத்தனர்.

Related Stories: