தஞ்சை அருகே விவசாய நிலத்தில் பெட்ரோலிய குழாய் அமைக்க எதிர்ப்பு : வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை அருகே விவசாய நிலத்தில் பெட்ரோலிய குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா வெண்டயம்பட்டி கிராம விளைநிலங்கள் வழியாக நாகை மாவட்டம் அரிமணத்திலிருந்து, திருச்சி மாவட்டம் வாளவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்ல எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஐஓசிஎல் நிர்வாக ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெண்டையம்பட்டி, ராயமுண்டான்பட்டி, நவலூர், சுரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன வாகனங்களை சிறைபிடித்ததோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த துணை கலெக்டர் ரவிக்கண்ணன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன துணை பொது மேலாளர் எம்.ஜி.ஜாய் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. இது குறித்து தாசில்தார் ராமச்சந்திரன் கூறுகையில், குழாய் பதிக்கப்பட உள்ள நிலம் கோயில் நிலம். இதற்கு அறநிலையத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பீடு தரவும் ஐஓசிஎல் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என்றார்.

Related Stories: