சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு: நாளை தமிழக எல்லை வந்தடையும்

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நாளை  தமிழக எல்லை வந்தடையும் என்று நீர் வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.  தெலுங்கு - கங்கா திட்ட ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் 12 டிஎம்சி நீர் ஆந்திர அரசு தர வேண்டும். கடந்த தவணை காலத்தில் 7.6 டிஎம்சி மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தது. இதனால் நிலுவையில் உள்ள 4.4 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். எனவே, தமிழகத்துக்கு வர வேண்டிய 4.4 டிஎம்சி கிருஷ்ணா நீரை பெற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர், ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதினார்.    தற்போது கண்டலேறு அணையில் 45 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் நீர் இருந்தால் தண்ணீர் திறந்து விடலாம். எனவே, தமிழக அரசு கோரிக்கை தொடர்பாக ஆந்திர அரசிடம் அங்குள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று காலை 9 மணியளவில் 500 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வரும் 16ம் தேதி காலை அல்லது மாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடையும் என்று நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>