கல்வெட்டு ஆய்வுத்துறையில் காலி இட விவகாரம் உங்களுக்கு அறியாமை உள்ளது... உங்கள் புரியாமையே பிரச்னை...ட்விட்டரில் மத்திய அமைச்சர், மதுரை எம்பி காரசார மோதல்

மதுரை: போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயத்தில் இருக்கிறது. எனவே புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டுமென மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டது. மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதம் விபரம் வருமாறு: இந்திய வரலாறு 98% கல்வெட்டுகள் சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கண்டறியப்பட்ட 80 ஆயிரம் கல்வெட்டுகளில் சுமார் 70% தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளாகும். கல்வெட்டுகளின் காகித பதிவுகள் மோசமான நிலையில் இருப்பதால் 80,000 கல்வெட்டுகளை உடனடியாக கணினி மயமாக்கும் பணி அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறைந்தது இரு கல்வெட்டு ஆய்வாளர்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.  கல்வெட்டு ஆய்வுக்கென்று குறைந்தது 40 தொழில்நுட்ப பதவிகளை உருவாக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இக்கடிதத்துக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ட்விட்டரில் தமிழில் இட்ட பதிவில், “தங்களுக்கு இந்தியாவின் கலாச்சாரத்துறை செய்துவரும் பணிகள் குறித்து அறியாமை உள்ளது. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவை நான் மதிக்கிறேன். நமது பேச்சு கிணற்று தவளை போல் அல்லாமல், பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2,76,449 ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் இட்ட பதில் பதிவில், ‘‘இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள். குறைந்தது ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமனம் செய்யுங்கள் என நான் கேட்டுள்ளேன். இதில் கிணறும், தவளையும் எங்கிருந்து வந்தன? எனது அறியாமையல்ல. உங்களின் புரியாமைதான் பிரச்னை. சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் ஆய்வு மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஒன்றிய கலாச்சாரத்துறையின் கீழ் வரும் தேசிய சுவடிகள் குழுமம் அந்த திட்டத்திற்கான நிதியை 2ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. இதிலாவது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>